திருவள்ளூர் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1 பெண் உயிரிழப்பு.மேலும் 46 தொழிலாளர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பல தொழிலாளர்கள் உடல் நலம் பாதிப்புக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவைத் தொடர்ந்து பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் இரவு பணிகளை முடித்து விட்டு அறையில் உறங்கிக் கொண்டிருந்த பல பேரும் இதனால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பலரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வாயு கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தால் தொழிற்சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவிய நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.