தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி – வாட்ஸ்அப் மூலம் எளிதாக மருத்துவ அப்பாயின்ட்மெண்ட் பெறலாம்
சென்னை, ஜூலை 8: பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ முன்பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தேசிய நலவாழ்வுக் குழுமம் (NHM) இணைந்து ‘நலம்AI’ என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையின் மூலம் மக்கள் மருத்துவமனைக்கு நேரில் செல்லாமல், தங்களது செல்போன் மூலமாகவே மருத்துவ ஆலோசனைக்கான முன்பதிவுகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
முதற்கட்டமாக சென்னை நகரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் இந்த சேவை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. பின்னர் இதனை மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சேவையை பயன்படுத்துவது எப்படி?
* 96192 22999 என்ற எண்ணை மொபைலில் சேமிக்கவும்.
* வாட்ஸ்அப்பில் “HI” என்று செய்தி அனுப்பவும்.
* சாட்பாட் வழங்கும் வழிமுறைகளை பின்பற்றி மருத்துவ முன்பதிவை மேற்கொள்ளவும்.
தொடக்க விழா
இந்த சேவையை தமிழ்நாடு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் ஜூலை 8 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.
தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி அரசு மருத்துவ சேவைகளை மக்களுக்கு மேலும் எளிதாகவும் விரைவாகவும் வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments